அச்சம், மனிதனின் மனதுக்குள் விதைத்த விதைதான் ‘கடவுள்’. மனித குலத்தின் ஆரம்பக்கால வாழ்க்கையானது இப்போதிருப்பதைப் போன்று அலுவலகத்துக்குச் சென்றோம்… வீடு திரும்பினோம்… காதல் செய்தோம்… தூங்கினோம்… என்று அவ்வளவு எளிமையாக இருக்கவில்லை. அவன் நித்தமும் அபாயங்களால் சூழப்பட்டிருந்தான். எப்போது அவன் வேட்டையாடப்படுவான் என்று அவனுக்கே தெரியாது. எதிரிகள், விலங்குகள், பூச்சிகள், நோய் என்று பல உருவங்களிலும் அவனுக்கு முன் மரணம் காத்திருந்தது. அந்த காலத்தில் வயது முதிர்ந்து வரும் இயற்கையான மரணம்கூட ஒருவகையில் மனிதன் பெற்ற மிகப்பெரிய வரமாகத்தான் இருந்தது.
ஆதிமனிதனுக்கு ஒரு நம்பிக்கை தேவைப்பட்டது. அந்த நம்பிக்கையானது தன்னை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும் என்று நம்பினான்.
அந்த நம்பிக்கையின் வடிவம் தான் கடவுள். இந்த உலகில் தன்னைவிடவும் வலிமையான சக்திகள் எவை எவையோ அவை அனைத்தையும் கடவுளாக வழிபடத் தொடங்கினான். பகலில் வெளிச்சத்தைத் தரும் சூரியன், இரவில் இருளை விரட்டி, காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நெருப்பு, காற்று, மழை, கடல், உயர்ந்த மலை என்று இயற்கை சக்திகள் அனைத்தையும் கடவுளாக வழிபடத்தொடங்கினான். அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கடவுளாகப் பாவித்து பெயர் சூட்டி வழிபட்டான்.
வரலாறு என்பதன் வரைவிலக்கணம் மனிதன் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால், கடவுள்கள் பற்றிய தொல்கதைகள் மனிதன் பேசத்தொடங்கிய காலகட்டத்திலிருந்தே தோன்றிவிட்டன. மனித குல வரலாற்றில் முதல் ஏகாதிபத்திய அரசு எகிப்து. மனித நாகரிகத்தின் தொட்டில் என்று வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுவது எகிப்து. நாகரிகம், கலை, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம், கட்டிடக்கலை, பொறியியல் ஆகியவற்றை மனிதனுக்கு கற்றுக் கொடுத்ததைப் போன்றே கடவுள் நம்பிக்கைகள், கடவுள்கள் பற்றிய தொல் கதைகள் ஆகியவற்றை மனித சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியதும் எகிப்துதான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். மனித குல வரலாற்றில் 3000 வருடங்களுக்கு மேலே தொடர்ந்து இயங்கிய பெருமையுடையது எகிப்து மட்டுமே.
பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர்கள் பாரோ (Pharaoh) என்று அழைக்கப்பட்டனர். பாரோக்களுக்கு எகிப்தை ஆளும் ஆட்சியதிகாரம் தெய்வத்திடமிருந்து கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பண்டைய எகிப்தின் புராணக் கதைகளும் கர்ணபரம்பரைக் கதைகளும் இந்த உலகின் தோற்றம் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றன…
தொடக்கத்தில் இந்தப் பிரபஞ்சம் சூனியத்தால் (Nun) மட்டுமே நிறைந்திருந்தது. சூனியத்திலிருந்து வெளிப்பட்ட மலையிலிருந்து ஆட்டம் (Atum) எனும் கடவுள் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டார். இவர்தான் ஒன்பது இயற்கைக் கடவுள்களை உருவாக்கினார். இவர்களிலிருந்து பல கடவுள்கள் உருவானார்கள்.
எகிப்தின் முதன்மைக் கடவுளாக ’ரே’ (Ra) எனும் சூரியக் கடவுள் வழிபடப்பட்டார். காற்றின் கடவுளாக சூ (Shu), வானத்தின் கடவுளாக நட்(Nut), பூமியின் கடவுளாக ஜெப் (Geb) ஆகியோர் வணங்கப்பட்டனர். ஜெப் கடவுள் சிரிப்பதனாலேயே பூமியில் நில அதிர்வுகள் ஏற்படுவதாக பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள். இசிஸ் (Isis) மாயாஜாலங்களின் கடவுளாகவும், ஹதொர் (Hathor) எனும் பெண் தெய்வம் மகிழ்ச்சிக்கான கடவுளாகவும் வணங்கப்பட்டனர். ஒசிரிஸ் (Osiris) மரணத்துக்கான கடவுளாக வழிபடப்பட்டார்.
பண்டைய எகிப்தில் பல்வேறு கடவுளர்கள் வணங்கப்பட்டாலும் அவர்களின் வாழ்வியலோடு இணைந்திருப்பது நான்கு கடவுளர்கள்தான். காலத்தால் அழியாத பிரமிடு உருவாக்கத்துக்குப் பின் இருப்பதும் அவர்களே. நட் எனும் வானமும் ஜெப் எனும் பூமியும் இணைந்து ஒசிரஸ் (Osiris), ஐசிஸ் (Isis), நெப்தி (Nephthys) , சேத் (Seth) ஆகிய நான்கு கடவுள்களை உருவாக்கினார்கள். இவர்களில் நெப்தி – சேத் மற்றும் ஐசிஸ் – ஒசிரஸ் ஆகியோர் கணவன் மனைவியர்கள்.
இந்த நான்கு கடவுள்களும் அரசாள்வதற்கு எகிப்திற்கு வருகிறார்கள். ஐசிஸ் – ஒசிரஸ் இணையர்கள் நைல் நதியின் வளமான பகுதியிலும்; நெப்தி – சேத் இணையர்கள் பாலைவனத்திலும் அரசாண்டனர். ஒசிரிஸ் விவசாயத்தின் கடவுள் என்பதால் தன் மக்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கிறார். நாடு செழிப்படைகிறது. பாலை வன வெயிலில் வாடிய சேத் கடவுள் தன் சகோதரன் நைல் நதிக்கரையில் செழிப்பாக வாழ்ந்ததைக் கண்டு பொருமினான். தன் சகோதரனின் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த சேத் சதித்திட்டம் தீட்டி ஒசிரசை விருந்துக்கு அழைத்தான். அந்த விருந்தில் ஒசிரசைக் கொன்ற சேத் அவனை ஒரு பெட்டியில் அடைத்து நைல் நதியில் வீசிவிடுவான். இறந்து போன தனது கணவனின் உடலைத் தேடிக் கைப்பற்றுவாள் ஐசிஸ் கடவுள். ஆனால், துரதிஷ்டவசமாக மீண்டும் ஒசிரசின் உடலைக் கைப்பற்றும் சேத் அதைப் பதிமூன்று துண்டுகளாக வெட்டி மீண்டும் நைல் நதியில் எறிந்துவிடுவான்.
தனது கணவனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று நினைத்த ஐசிஸ் கடவுள் தனது கணவனின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை நைல் நதியில் தேடிக் கண்டுபிடித்தாள். துண்டாக்கப்பட்ட ஒசிரசின் உடல் பாகங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அதைத் துணிகளால் சுற்றி ‘மம்மி’யாக்கி ஐசிஸ் கடவுள் அதற்கு உயிர் கொடுத்தாள். உயிர்த்தெழுந்த ஐசிஸ் கடவுள் அதன்பிறகு இறந்தவர்களின் கடவுளானார். பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கி இறந்தவர்களின் நீதிபதியாகவும், விவசாயத்துக்கு உதவும் தெய்வமாகவும் மாறினார் ஒசிரஸ்.
தன் கணவனது உயிரை இரண்டு முறை மீட்டுக்கொண்டுவந்த ஐசிஸ் கடவுள் மீது மக்களுக்குப் பக்தி அதிகம். எகிப்து வரலாற்றில் புகழ்பெற்ற கிளியோபாட்ராகூட தன்னை ஐசிஸ் கடவுளின் மறுபிறவி என்று கூறியே மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிஸ் – ஒசிரஸ் கடவுளின் மகனது பெயர் ஹோரஸ். இவன் தகுந்த காலத்துக்காகக் காத்திருந்து, பிறகு சேத்தைப் போரில் தோற்கடித்து தனது தந்தையின் நாட்டைக் கைப்பற்றுவான். போரில் தன் ஒரு கண்ணை இழந்த ஹோரஸ் ரே தெய்வத்தின் அருளால் மீண்டும் பார்வையைத் திரும்பப் பெற்றான். அதன் பிறகு நைல் நதிக்கரையைச் சுற்றிய வளமான பகுதியை ஹோரசும் பாலைவனத்தைச் சேத்தும் ஆட்சி புரியலானார்கள். ஹோரஸ் கழுகுத் தலையைப் பெற்றிருப்பவன். இவன்தான் பண்டைய எகிப்து மன்னர்களான பாரோ மன்னர்களுக்கு அரசுரிமையை அளித்தான் என்பது நம்பிக்கை. அதனால்தான் பண்டைய எகிப்து அரசர்கள் அனைவரும் கழுகுத் தலையுடைய ஹோரசுடன் தொடர்புப்படுத்தி அவர்களின் ஓவியங்களைப் பிரமிடுகளில் வரைந்தார்கள்…
எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றிருப்பது மம்மி தான். அவர்களின் முதலாவது மம்மியாக்கம் ஒசிரசிலிருந்து தான் தொடங்குகிறது. பிரமிடுகள் சூரிய சந்திர வெளிச்சத்தில் ஒளிரும் தன்மையுடையவை. இந்த வடிவம் வானத்துக்கும் மண்ணுக்கும் தொடர்பு ஏற்படுத்தி, ஒசிரஸ் கடவுள் உயிர்த்தெழுந்ததைப் போலவே இறந்த அரசனின் ஆவியும் பிரமிடில் எழுந்து, அவனோடு புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் உடைமைப் பொருள்களுடன் பூத உடலோடு நேராக சொர்க்கத்துக்குச் செல்லும் என்று நம்பினார்கள் பண்டைய எகிப்தியர்கள். அந்த நம்பிக்கைதான் எகிப்தியர்களை வானளாவிய பிரமிடுகளை எழுப்ப வைத்தது.
தொல்லியல் ஆய்வாளர்கள் இறந்தவர்களைப் புதைக்கும் எகிப்தியர்களின் நாகரிகம் தான் அவர்களின் வரலாற்றில் முக்கியப் புள்ளியாகக் கருதுகிறார்கள். தொடக்கத்தில் பாலைவனத்தில் புதைக்கப்பட்ட உடலைக் கிளறி ஓநாய்கள் உண்டுவிடும். அதனால், பிற்காலத்தில் பாறைகளைத் தோண்டி இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பாகப் புதைக்கத் தொடங்கினார்கள். இந்தப் பாரம்பரியத்தின் முன்னேற்றமே பிரமிடாக வளர்ச்சியடைந்தது என்கிறார்கள்.
எகிப்தியக் கடவுள்களுக்குக் காளை மாடுகளைப் பலிகொடுக்கும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது. ஆனாலும், பலி கொடுக்கும்போது தலையிலிருந்து வால் வரை ஒரு கறுப்பு மயிர் கூட இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். கறுப்பு மயிர் இருக்கும் காளைகளைப் பலிகொடுக்க மாட்டார்கள். அதே நேரம் பசு புனிதமானதாகக் கருதப்படுகிறது. பசு, ஐசிஸ் கடவுளின் வடிவமாக எகிப்தியர்களால் வணங்கப்பட்டது. அதனால், பசு இறந்தால் நைல் நதியில் வீசிவிடுவார்களே தவிர உண்ணமாட்டார்கள்…
ஒரு தகவல்..!
பண்டைய எகிப்து மக்கள் தம் அரசர்களைக் கடவுளாகவே வணங்கினார்கள். எகிப்தை எத்தனை மன்னர்கள் ஆட்சி செலுத்தியிருந்தாலும் அவர்களில் முக்கியமானவர் இரண்டாம் ராமேசஸ் (Ramesses II). கிரேக்க இலக்கியங்களில் ஓசிமாண்டியாஸ் என்று புகழப்படுபவர் இவரே. இவரது காலம் கி.மு 1303 -கி.மு 1213. இவரது மம்மி உடல் கி.பி 1881 – ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு எகிப்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் இரண்டாம் ராமேசசின் உடல் மோசமானது. இதைச் சரிசெய்யும் தொழில் நுட்பம் பிரான்சில் இருந்ததால் அங்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், எகிப்து நாட்டு சட்டப்படி பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே ஒருவர் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் வெளிநாடு முடியும். அதனால், இரண்டாம் ராமேசஸ் உடலுக்கு பாஸ்போர்ட் கொடுத்தது எகிப்து அரசு. கிட்டத்தட்ட மூன்றாயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்த ஒருவர் பாஸ்போர்ட் பெற்றது இதுவே முதல் முறை. கடவுச்சீட்டில் ’King’ என்ற அடையாளத்துடன் பிரான்சில் இறங்கியதால் சகல ராணுவ மரியாதையுடன் உடலைப் பெற்றுக்கொண்டு சரி செய்து கொடுத்தது பிரான்ஸ் அரசு. எகிப்திய மன்னர்கள் அரசர்களைத் தம் கடவுளாகவே எண்ணி மரியாதை செலுத்தினார்கள். மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மரியாதையுடன் இன்னும் எகிப்தின் கெய்ரோ அருங்காட்சியத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் இரண்டாம் ராமேசஸ்.
இந்த இரண்டாம் ரமேசஸ் குறித்து ஷெல்லி எழுதிய ’ஓசிமாண்டியாஸ் கவிதை’ ஒன்று உலகப் புகழ் பெற்றது. அது…
பழந்தேசத்துப் பயணி ஒருவரைச் சந்தித்தேன்…
அவர் சொன்னார்:
பாலைவனத்தில் உடலற்ற இருபெரும் கால்கள் நிற்கின்றன
அருகில் மணலில் சிதைந்த முகமொன்றைக் கண்டேன்
சுருங்கிய இதழ்களில் என்னவொரு அலட்சியமான கம்பீரம்?
வடித்த சிற்பி திறமைசாலி தான்
உயிரற்ற கல்லில் உணர்ச்சிகளை உயிர்ப்பித்திருக்கிறான்.
கால்கள் நின்ற பீடத்திலே எழுதியிருந்தது:
”என் பெயர் ஓசிமாண்டியாஸ்,
அரசர்களுக்கெல்லாம் அரசன் நான்.
நான் படைத்தவற்றைப் பார், ஆற்றாமை கொள்!”
கால்களையும், உடைந்த முகத்தையும் தவிர
சுற்றி வேறொன்றும் இல்லை..
தொடுவானம் வரை அழிவும் மணலும் மட்டுமே தெரிந்தன.
– ஷெல்லி…