கேரளா, இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது காந்தளூர். இந்தக் காந்தளூருக்கு அருகில் மறையூர், காரையூர், கீழாந்தூர் மற்றும் கொட்டக்குடி என்று நான்கு கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஐந்து கிராமங்களும் ‘அஞ்சுநாடு’ என்றும்; இங்கு வாழும் மக்கள் ‘அஞ்சுநாட்டு மக்கள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவற்றில் கொட்டக்குடி மட்டும் தற்போது தேனி மாவட்டத்தின் கீழும்; மற்ற நான்கும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் கீழும் வருகின்றன. இந்த ஐந்து கிராமங்களிலும் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பாண்டிய நாட்டு மக்கள் வசிக்கிறார்கள்.

உடுமலையிலிருந்து மூணாறுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது ‘அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கு’. பெயருக்கு ஏற்றதைப் போலவே பெரும் பள்ளத்தாக்கில் பாம்பாறு தவழ, மலைகளின் உச்சியில் நான்கு கிராமங்களும் அமைந்திருக்கின்றன. கேரளாவில் இயற்கையான சந்தனக் காடு அமைந்திருக்கும் ஒரே பகுதி இது மட்டுமே.

சந்தனக் காட்டிலிருந்து வீசும் தென்றலை அனுபவித்தபடியே அஞ்சு நாட்டுக்குச் செல்லும்போது நம்மை முதலில் வரவேற்பது ‘தூவானம் அருவி’. இந்த அருவிக்கு அருகில் இருக்கும் மலைக்குப் பெயர் ‘படைவெட்டும் மலை’. இப்போது மலைமீது செல்லும் சாலை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலத்தில் தூவானம் அருவியைத் தாண்டி படைவெட்டும் மலையைக் கடந்தால் மட்டுமே அஞ்சு நாட்டுக்குள் நுழைய முடியும். போர்ப் படைகள் கடக்க முயற்சித்தால் மலை மீது தயாராக வைத்திருக்கும் பாறைகளை உருட்டிவிடுவார்கள். மொத்தப் படையின் நிலையும் அதோகதிதான்…

படை வெட்டும் மலையைத் தொடர்ந்து கத்தி தீட்டும் மலை, வென்று மலை, குமரிக் கல், கூட காடு (கூடல் காடு), அஞ்சுநாட்டான் பாறை, மன்னவன் சோலை, காதவனாச்சி மலை என்று ஒவ்வொரு மலைகளும் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. எதிரிகளால் நெருங்க முடியாத அளவுக்கு இயற்கை அரண்களால் சூழப்பட்ட பாதுகாப்பான இடம் அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கு. மறைந்து வாழ்வதற்கும் போர்ப் பாசறை, ஆயுதத் தொழிற்சாலை, போர்க் கலைகள் பயிற்றுவிக்கும் கடிகை அமைப்பதற்கும் ஏற்ற இடம் இது.

இந்த இடத்தின் பாதுகாப்பான நிலவியல் அமைப்பின் காரணமாக ‘பெருங்கற்கால பண்பாடு’ நிலவிய காலத்தில் (கி.மு 2500 – கி.மு 500 ) மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வாழ்ந்ததற்கான அடையாளம் இன்றும் கிடைக்கிறது. அஞ்சுநாட்டுப் பள்ளத்தாக்கில் மட்டும் சுமார் 2000- க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ‘கல் திட்டைகள்’ காணப்படுகின்றன. இந்தக் கல் திட்டைகள் இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள். மேலும், அவர்கள் தீட்டிய ஓவியங்களும் இங்குப் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன.

சிவப்பு வண்ணத்தில் மான்கள் சூழத் தீட்டப்பட்டிருக்கும் கொற்றவைதான் தமிழகத்தின் மிகப் பழைமையான ஓவியம். புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளும் இங்குக் காணப்படுகின்றன. 7000 வருடங்களாக மக்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் இந்தப் பகுதியில் கிடைக்கின்றன. அந்த அளவுக்குப் பழைமையான இடம் அஞ்சுநாட்டுப் பள்ளத்தாக்கு.

நண்பர்கள் தென்கொங்கு சதாசிவம் மற்றும் பல்லடம் ராஜேந்திரன் ஆகியோர் வழிகாட்ட அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கின் இயற்கை அழகை ரசித்தபடி மறையூருக்குச் சென்றோம்.

அங்குச் சென்றபோது அந்தக் கிராமத்தின் ‘தலைவாசல்’ எங்களை வரவேற்றது. தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறியதும் அந்த ஊரின் பெரியவர்கள் கூடி விவாதித்தார்கள். பிறகுதான் தெரிந்தது, அங்கு எந்த முடிவையும் தனி நபர்கள் எடுப்பதில்லை என்று. பெரியவர்கள் அடங்கிய குழு மூலமே விவாதித்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள்.

குலதெய்வமாக வேட்டைக் கருப்பனையும், காளி தேவியையும்தான் வழிபடுகிறார்கள். நீண்ட விவாதத்துக்குப் பிறகு அந்த ஊர்ப் பெரியவர்கள் அவர்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். மலையாளக் கலப்பில்லாத தூய தமிழில்…

“எங்க முன்னோர்கள் எல்லாரும் மதுரைல வாழ்ந்த மறவர்கள். போர் நடந்தப்ப பாண்டிய ராசாவுக்கு அடிபட்டுடுச்சி. படைலேருந்து கலஞ்சி அவரத் தூக்கிகிட்டு இங்க வந்துதான் காப்பாத்துனாங்க. காந்தளூர்க்கு மேலே ‘மன்னவன் சோலை’ங்கற இடத்துலதான் எங்க ராசா மறைஞ்சிருந்தாரு” என்று பெரியவர் ஒருவர் பேசிக்கொண்டிருந்த போதே அங்கு நீண்ட போர் வாட்களுடனும், ஓலைச் சுவடிகளுடனும் சிலர் வந்தார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு போர் வாளையும், ஓலைச் சுவடியையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பிறகு தெரிந்துகொண்டோம். சுவரில் நீண்ட கொம்புகள் மாட்டப்பட்டிருந்தன. நாங்கள் வாட்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது மற்றொரு பெரியவர் பேசத் தொடங்கினார்.

#பாண்டிய_ஆபத்துதவிகள்

#மறையூர்_வாழ்_மக்கள்

“பாண்டிய ராசாகூட காவலுக்கு வந்தவங்க இந்த அஞ்சுநாட்டு பள்ளத்தாக்குலையே தங்கிட்டாங்க. திரும்பவும் மதுரைக்குப் போகவே இல்ல. ஏன்னா, மதுரைக்குப் போனா தலையை வெட்டிப்புடுவாங்கன்னு பயம். எங்களுக்கும், ‘மதுரைக்குப் போகக்கூடாது. அங்க போனா தலையை வெட்டிப்புடுவாங்க’னு சொல்லித்தான் வளத்தாங்க. கடந்த இருவது, முப்பது வருசமாத் தான் நாங்க மதுரைக்குப் போய்கிட்டு இருக்கோம். அதுக்கு முன்னாடி யாரும் மதுரை பக்கம் தலைய வச்சி கூட படுத்தது இல்ல” என்றவரது கண்களில் சற்றே பயம் தோன்றியிருந்தது.

அப்போது பாறைகளைப் பெயர்த்து எடுக்கும் நீண்ட கடப்பாரை ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தவர், “இது கொல்லர்கள் பயன்படுத்துறது. ஒரு காலத்துல கொல்லர்களுக்கும், மறவர்களுக்கும் சண்டை நடந்தது. அதோட அடையாளமாகத்தான் இந்த கடப்பாரையை இன்னும் வச்சிருக்கோம். கொல்லனுங்க எங்களுக்கு சாபம் கொடுத்துட்டாங்க. அதனாலதான் நாங்க இன்னமும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். அந்த சாபம் எப்ப எங்களவிட்டு எப்ப நீங்குமோ? தென்காசிநாதர் தான் அருள்புரியனும்…” என்றார் ஆதங்கத்துடன்.

கொல்லர்களுக்கும், மறவர்களுக்கும் என்ன பிரச்னை என்பது பற்றி அறிய சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலே நாம் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். சரியாகக் கூற வேண்டுமென்றால் கண்ணகி வாழ்ந்த சங்க காலத்துக்கு…

கண்ணகியும், கோவலனும் மதுரைக்குச் சென்ற வேளையில், பொற்கொல்லன் ஒருவன் பாண்டிய அரசியின் கால்சிலம்பைத் திருடிவிட கோவலன் கொல்லப்படுவான். பாண்டிய மன்னனும் அவனது பட்டத்தரசியும் இறந்துவிட கண்ணகியின் சீற்றத்தினால் மதுரையே அழிந்துவிடும். மதுரையின் அழிவுக்குக் கொல்லர்கள்தான் காரணமென்று…. மறவர்களும், பொதுமக்களும் அவர்களைத் தாக்கினார்கள். பல்லாயிரக்கணக்கான கொல்லர்கள் பாண்டிய நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். விரட்டப்பட்ட கொல்லர் குடும்பங்கள் மறைந்து வாழக் குடியேறிய இடம் இந்த அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்குதான்.

மறவர்களுக்கும், கொல்லர்களுக்கும் போர் நடைபெற்றதாகக் கூறப்படும் இடம் ஆலத்தூர் மாசி. அந்த இடத்தைச் சுற்றி சந்தனமரக் காடு, தென்னந்தோப்புகள், கரும்புத் தோட்டம் என்று செழித்து காணப்பட்டாலும் போர் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படும் இடம் மட்டும் தரிசாகவே இன்றும் காணப்படுகிறது. அங்கு, ஈழத்துஅரளி மரத்துக்கு அடியில் ஆலத்தூர் தம்புரான் எனும் சிறு கோயில் காணப்படுகிறது. அதைக் கருப்பு கோயில் என்றும் அழைக்கிறார்கள்.

#ஆலத்தூர்_மாசி:

ஆலத்தூர் மாசிக்கு அழைத்து வந்தவர் கொல்லர்களுடனான போர் பற்றி விவரிக்கத் தொடங்கினார்…

“எங்க முன்னோர்கள் இந்தப் போர, ‘கொல்லாயிரம் குடியாயிரம் போர்’னு சொல்லுவாங்க. மதுரைல இருந்தப்பவே கொல்லர்களுக்கும், மறவர்களுக்கும் பெரிய அளவுக்குப் பிரச்ன. அவுங்கள மதுரையிலேருந்து விரட்டுனதே மறவர்கள் தான். ஆயிரம் ஆண்டுகள் கடந்துபோனப்பவும் அந்தப் பகை குறையாம பொகஞ்சிக்கிட்டு தான் இருந்துது. இந்த நேரத்துல மறவர் குடும்பத்து பையனும் கொல்லர் குடும்பத்து பொண்ணும் காதலிச்சு உடன்போக்கு மேற்கொண்டுட்டாங்க.

ஆயிரம் ஆண்டா பொகஞ்சிக்கிட்டு இருந்த பகை போரா மாறுச்சு. அந்தப் போர்ல கொல்லர்கள் எல்லாரும் கொல்லப்பட்டாங்க. அப்போ கொல்லர்கள் விட்ட சாபம் எங்கள இன்னமும் விரட்டிக்கிட்டு இருக்கு. எப்போ பாவ விமோசனம் கிடைக்குமோ தெர்ல…” என்றார். இன்றும் அஞ்சுநாட்டில் வசிக்கும் பாண்டியர்கள் தங்களுக்குள் தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். வேறு இனத்தில் திருமணம் செய்துகொண்டால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு பேசினார்… “மதுரையப் புடிச்சதுக்கு அப்பறமா பட்டாணித் துலுக்கனுங்க பாண்டிய ஆபத்துதவிகளையும் மீறி ராசாவ தேடிவந்து கொன்னுட்டுப் போயிட்டானுங்க” என்று கூறியபோது அவரது குரல் மாறியிருந்தது. பாண்டிய ஆபத்துதவிகள் என்கிறவர்கள் பாண்டிய மன்னரின் மெய்க்காவல் படையினர். பட்டாணித் துலுக்கர்கள் எனப்படுகிறவர்கள் 13 – ம் நூற்றாண்டில் மதுரையைக் கைப்பற்றி அரசாண்ட சுல்தானியர்கள் ஆவார்கள்.

#ஆபத்துதவிகள்

#முதுவான்கள்_வாழும்_மலை:

மறையூர் கிராமத்துக்கு மேலே மலை உச்சியில் ‘முதுவான்கள்’ எனப்படும் பாண்டிய ஆபத்துதவிகள் இன்றும் வசிக்கிறார்கள். அவர்கள் தனித்தே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை நெருங்க முடிந்தாலும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். அவர்களைப் பற்றி அஞ்சுநாட்டு மக்களிடம் விசாரித்தால், “எங்கள சேர்ந்தவங்க தான் அவுங்களும். ஆனா, வெளி ஒலகத்துலேருந்து விலகியே இருக்கறாங்க” என்று பதில் அளிக்கிறார்கள்.

மறையூரில் வசிக்கும் பாண்டியர்களுக்கு முக்கியமான கோயில் தென்காசி நாதர் கோயில். தமிழர்கள் வாழும் பூமியான அஞ்சுநாட்டுப் பள்ளத்தாக்கில் ஆகம முறைப்படி வழிபாடு நடந்துகொண்டிருக்கும் சில கோயில்களில் இதுவும் ஒன்று. பெரும்பாலான கோயில்கள் மலையாளர்கள் வழிபடும் தாந்திரீக முறைக்கு எப்போதோ மாற்றப்பட்டுவிட்டன.

#தென்காசிநாதர்_கோவில்:

தென்காசிநாதரை வழிபட்டுவிட்டு அஞ்சுநாட்டின் மற்றொரு ஊரான காரையூருக்குச் சென்றோம். அங்கு ஒரு அதிசயம் எங்களுக்குக் காத்திருந்தது. சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான, வழக்கொழிந்து போனதாகக் கருதப்படும் தமிழரின் ஆதிகால ‘கந்து வழிபாடு’ முறையைக் கண்டோம்.

‘கடவுள் உறையும் இடமாகக் கருதி மரங்களை வழிபடும் பழக்கம்’ ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக இருந்தது. ஒரு மரத்தை வெட்டி அதற்குப் பொட்டு வைத்து, அலங்கரித்து அதைக் கடவுளாக வழிபடுவதே ‘கந்து’ வழிபாடு. இயற்கையைக் கடவுளாக வழிபட்டத்துக்கும் சிலை வழிபாட்டுக்கும் இடைப்பட்ட வழிபாட்டு முறை இது. இன்று கோயில்களில் தல விருட்சங்களாக இருப்பவை ஒரு காலத்தில் கந்து வழிபாடாக வழிபடப்பட்ட மரங்களே.

#கந்து_வழிபாடு:

‘புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில்,

கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து

உடன் உறை பழைமையின் துறத்தல் செல்லாது’ என்று கந்து வழிபாட்டைப் பற்றி அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. அங்கு மேலும் விசாரிக்கையில்தான் தெரிந்தது, அஞ்சு நாட்டில் வசிக்கும் பாண்டியர்கள் அனைவரும் கந்து வழிபாட்டைத் தான் முதன்மையாகப் பின்பற்றுகிறார்கள் என்று.

கந்துக் கோயிலுக்கு அருகே காணப்படும் பாறைக் குழிகளில் அரிசி குத்தி, உமி போக்கி பொங்கல் வைத்து, வாழை மரத்தை நட்டு, அதைக் காளியாக நினைத்து, ஆட்டினைப் பலி கொடுத்து வழிபடுகிறார்கள். உலகத்தில் அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கில் மட்டும்தான் கந்து வழிபாடு பழைமை மாறாமல் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து பாண்டிய ஆபத்துதவிகளின் தடயம் தேடி பெருமலை எனும் இடத்துக்குச் சென்றோம். அங்கு, தாந்திரிக முறைப்படி பகவதி அம்மன் கோயிலாக மாற்றப்பட்ட சிவன் கோயில் ஒன்று காணப்படுகிறது. சிவபெருமான் கூரை வேயப்பட்ட மண்தளிக்குள் அமர்ந்து அருள்புரிகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயிலைப் பார்த்தது மாறியிருந்தது. கந்து வழிபாட்டின் ஆரம்ப நிலையில் தோரணம் கட்டப்பட்டது. பிறகு வழிபாட்டு முறைகள் வளர்ச்சியடைந்து மண் சுவர் வைக்கப்பட்டது. மண்தளி செங்கல் தளியாகி, செங்கல் தளி இடிக்கவே முடியாத கற்களாலான கற்றளியாகப் பிற்காலத்தில் மாறியது.

கோயில்களின் ஆரம்ப நிலை மண்தளிதான். இன்றும் மண்தளிக்குள் தான் சிவபெருமான் அருள்புரிகிறார். இங்குக் கற்கால மனிதர்களின் கூர் ஆயுதக் கற்கள் கருப்புவாகவும், வீரனாகவும் வழிபடப்படப்படுகிறது.

இந்தப் பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே ‘மந்தை’ எனும் பெருங்கற்கால சின்னம் ஒன்று காணப்படுகிறது. அதைப் பற்றி விளக்கினார் பெருமலையைச் சேர்ந்த பெரியவர் ஒருவர்…

“எங்களப் பொறுத்தவரைக்கும் இந்த ‘மந்தை’க் கல் ரொம்பவும் முக்கியமான இடம். கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல இங்க வந்துதான் ஆசி பெறுவாங்க. ஊர் கூட்டத்த இங்கதான் கூட்டி முடிவுகள எடுப்போம். எங்களுக்கும் கொல்லர்களுக்கும் நடந்த போர்ல கொல்லர்கள் எல்லாரும் செத்துட்டாங்க. அப்போ கொல்லர் வீட்டுப் பொண்ணுங்க எல்லாரும் தாலிய அறுத்தாங்க. அந்தத் தாலிங்க ஏழு தாழில நெரம்புச்சு. அந்தத் தாழிகள இங்கதான் எங்க முன்னோர்கள் பொதச்சி வச்சிருக்கங்க. இதத்தான் நாங்க கும்புட்டுக்கிட்டு இருக்கோம்” என்றார் சோகமாக.

இதே பெருமலையில் தான் ‘கொல்லன் வளவு’ எனும் இடம் இருக்கிறது. அதுதான் கொல்லர்கள் வாழ்ந்த இடம். இப்போது விளை நிலமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தப் பகுதி முழுவதும் கொல்லர்கள் இரும்பை உருக்கிய எச்சங்கள் அவர்களின் சோகக் கதையைக் கூறியபடி சிதறிக் கிடக்கின்றன. இதே மலையில் தான் பாண்டிய மன்னன் மறைந்திருந்த ‘மன்னவன் சோலை’ என்ற இடம் காணப்படுகிறது.

அங்கிருந்து புறப்பட்டு காந்தளூர்ச் சாலையை நோக்கிச் சென்றோம். அங்குதான் நாங்கள் தேடிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் கிடைத்தது. காந்தளூருக்கு இன்னொரு பெயர் ‘உடைய தம்புரான்’. இங்கு ஒரு காலத்தில் நம்பூதிரிகள் வாழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். காந்தளூர் சாலை பயிற்சியளிக்கும் கடிகையாக மட்டுமல்லாமல் போர் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆயுதத் தொழிற்சாலையாகவும் இருந்திருக்கும் என்பதற்கு ஆதாரமாக நிறைய சுவடுகள் காணப்படுகின்றன.

இங்குக் கிடைத்த செப்பேட்டில் அஞ்சு நாட்டில் வாழும் மறவர்கள் குலசேகர பாண்டியன் காலத்தில் இங்கு வந்திருக்கலாம் எனும் குறிப்பு காணப்படுகிறது. பட்டாணி துலுக்கனால் கொல்லப்பட்ட பாண்டிய ராசா குலசேகர பாண்டியன் வழி வந்தவனாக இருக்கலாம்.

அஞ்சுநாட்டுப் பாண்டிய மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஓட்டுரிமையையே பெற்றிருக்கிறார்கள். இவர்களின் குலத்தொழில் விவசாயமும் வேட்டையாடுதலும்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, ‘ஹிந்து மலைவேடன்’ என்பதே இவர்கள் அடையாளம். இப்போது, ‘அஞ்சு நாட்டு வெள்ளாளன்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

முழுவதும் தமிழர்கள் வசிக்கும் இந்தப் பகுதி கேரளாவுடன் சேர்க்கப்பட்டதால் இயல்பாகவே மண்ணின் மைந்தர்களாக மதிக்கப்படவேண்டியவர்கள், தற்போது உரிமையிழந்து தவிக்கிறார்கள். அஞ்சு நாடு இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டு அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஒரு வனப்பு மிகுந்த சொர்க்க பூமி. இங்கு வாழும் மக்களின் பண்பாடு, வரலாறு ஆகியவை ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. முறையாக ஆராய்ச்சி செய்தால் இன்னும் நிறைய வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும்.

துளிகள் சில…

1. ஈழத்தரளி எனப்படுவது அந்தக் காலத்தில் வழிகாட்டப் பயன்படுத்தப்பட்ட தாவரம். ஈழத்தரளியின் மலர்களை இரவில் கூட அடையாளம் காண முடியும். அந்தக் காலத்தில், படையெடுப்பதற்கு எதிரி நாட்டுக்குள் ஊடுருவும் முன்னோடிப் படையினர் சரியான வழியைக் கண்டறிந்து ஈழத்தரளிச் செடியை விதைத்துக்கொண்டே செல்வார்கள். ஈழத்தரளி வளர்ந்ததும் அதனைப் பின்தொடர்ந்து வழி தவறாமல் எதிரி நாட்டை சரியான நேரத்தில் தாக்கும் பெரும்படை. அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கில் இப்போதும் பல கோயில்கள் ஈழத்து அரளி மரத்தின் அடியில் தான் காணப்படுகின்றன.

ஈழத்தரளி

2. அஞ்சு நாட்டு பாண்டிய மக்கள் கொல்லர்களின் சாபத்தை நினைத்து இன்றளவும் வருந்துகிறார்கள். சுமார் 800 வருடங்களுக்கு முன்நடந்த நிகழ்வினால் அவர்கள் அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். எங்களுடன் பயணித்த நண்பர் தென்கொங்கு சதாசிவம் kollar குலத்தைச் சேர்ந்தவர். இவரை வைத்து உப்பு மாற்றி இரு குலத்தையும் சமாதானம் செய்துவைத்தோம். உப்பு மாற்றி ஒருவர் கையால் மற்றொருவர் நீர் வாங்கி அருந்திய பிறகு அஞ்சுநாட்டு மக்களின் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.