தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார் பெயரிலேயே வெற்றியைக் கொண்ட அன்பு மகன் சாளையக்குறிச்சி திரு.வெற்றிவேல்.
அவரது வானவல்லி அதியற்புதமான அருமையான நாவல். சாண்டில்யனின் யவன ராணியின் கதையைப் போல கரிகால வளவனின் சரித்திரத்தைப் மிக அழகாக எழுதியிருக்கிறார். அவரது கதை சொல்லும் நடை, போர் முறைகள், விளக்கங்கள், எழுத்து நடை, போருக்கு அவர் வரைந்து கொடுத்திருக்கும் வரைபடங்கள் மற்றும் போர் வியூகங்கள் என அனைத்தும் சிறப்பு.
மூன்றாவது பாகத்தில் கதாசிரியர் ‘எரிபரந்தெடுத்தல்’ என்ற போர் முறையைப் பயன்படுத்தி வில்லவன் அகப்பா கோட்டையைக் கைப்பற்றுவதை அருமையாக சித்தரிப்பார். அங்கு அந்த காலகட்டத்தில் நடந்த விஞ்ஞான நிகழ்வான சூரிய கிரகணத்தை வில்லவன் பயன்படுத்தி அகப்பா கோட்டையைக் கைப்பற்றிய முறையை திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும்.
அதே போல நான்காம் பாகத்தில் தன் நாட்டிற்குள் உலாவுவது தென்னாட்டான் சோழர் படைத் தலைவன் திவ்யன் என அறிந்ததுமே சட்டென சூழ்நிலையைப் புரிந்துகொண்ட அவந்திகா தான் நதிக்கரையில் கைது செய்தது பேரரசர் கரிகாலர் என ஊகித்த புத்திசாலித்தனம், அதே சமயம் அவரை சிறையில் அடைக்காமல் தன்னை பெருந்தவறிலிருந்து காத்ததிற்கு தன் குல தெய்வத்திற்கு நன்றி செலுத்தியது எல்லாம் படிக்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறார் ஆசிரியர். (இது இளவரசி அவந்திகாவின் உயர் பண்பிற்கு எடுத்துக்காட்டு)
யவன தேசத்தில் செண்டாயுதன் செண்டினை சுழற்றி யவன அடிமைகளை மிரளவைக்கும் அடிமைகளின் போர், கடற் கொள்ளையர்கள், கடற் போர் என அனைத்தும் அருமை.
மேலும் இப்புதினத்தை படித்தவர்கள் மனதில் செங்குவீரனும், வானவல்லியும் நீங்காத இடம் பெறுவார்கள் என்பதில் துளி சந்தேகமும் இல்லை. அவர்களின் தியாகமும், வீரமும் நாட்டுப்பற்றும் படிக்கும்போது நமக்குள் ஒருவித பெருமிதத்தை உண்டாகச் செய்கிறது என்றால் அது கதாசிரியரின் வெற்றியன்றோ?
இன்னும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் வானவல்லியை வாங்கிப் படிப்பது சுவாரஸ்யமான அனுபவம் தான். அனைவரும் வாசிக்க வேண்டிய புதினம்.
நன்றி…உஷா சேஷாத்ரி